» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியற்ற விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!

வியாழன் 25, ஜூன் 2026 10:17:14 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும், தவறினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 117 மற்றும் 2023-ஆம் ஆண்டு விதிகளின்படி, தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள், அரசு நிலங்கள், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றில் விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளகார்டுகள், விளம்பர அட்டைகள் மற்றும் எல்இடி விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு மாநகராட்சியின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பெறப்பட்ட பல்வேறு புகார்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் காலத்திலோ அல்லது இறுதி அனுமதி வழங்கப்படுவதற்கு முன்போ எந்தவொரு விளம்பரச் சாதனங்களையும் நிறுவுவதற்கோ, காட்சிப்படுத்துவதற்கோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, உரிய அனுமதியின்றி மாநகராட்சி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வடிவத்திலான விளம்பரங்கள், அவற்றின் இரும்புச் சட்டங்கள் மற்றும் சார அமைப்புகளை, இந்த அறிவிப்பு வெளியான ஜூன் 23-ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் தாங்களாகவே முன்வந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

அவ்வாறு அப்புறப்படுத்தத் தவறினால், மாநகராட்சி நிர்வாகமே அவற்றை அகற்றிவிட்டு அதற்கான செலவினத்தைச் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்கும். மேலும், சட்டப் பிரிவு 117U-இன் கீழ் காவல்துறை மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது 5,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கச் சட்டத்தில் வழிவகை உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory