» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பிளஸ்-2 மாணவி ஒருவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தேடிப் பார்த்தபோது, அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
காவல் துறையினரின் தீவிர விசாரணையில், அந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விரிவாக விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம், கடந்த மே மாதம் 25-ஆம் தேதி தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை சட்டப்படி உறுதி செய்யக் கோரி, காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, முதற்கட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
உயர் நீதிமன்ற அமர்வின் புதிய உத்தரவு
இந்த நிலையில், இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட தர்ம முனீஸ்வரன் தரப்பில் இதுவரை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "விசாரணை நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவாளி எனத் தண்டனை விதிக்கப்பட்ட மனுதாரர் இதுவரை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. அவர் வருகிற திங்கள்கிழமை (ஜூன் 15) இந்த நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய இறுதி கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதேபோல, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தரப்பிலும் தங்களது மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்." இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









