» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.19 கோடி நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
வியாழன் 28, மே 2026 12:00:43 PM (IST)

துறையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன், தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்கள் மற்றும் அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்! மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு, இது என்னுடைய முதல் மக்கள் தொடர்பு முகாம் ஆகும்.
இன்றையதினம், துறையூர் கிராமத்தில் நடைபெறுகின்ற மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்து கோவில்பட்டி சார் ஆட்சியர் எடுத்துரைத்தார்கள். மேலும், பல்வேறு வகையான நல்ல திட்டங்கள் மற்றும் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் பற்றியும் திட்ட விளக்க கண்காட்சி அரங்கம் போன்று அமைத்து விளக்கி கொண்டிருக்கிறார்கள்.
அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் புது புது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இந்த திட்டங்கள் பற்றியும், அதன் பயன்பாடுகள் மற்றும் தகுதி அடிப்படைகள் என அனைத்தையும் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கியிருப்பார்கள். என்னென்ன திட்டங்கள் யார் யாருக்கெல்லாம் தகுதியுடையது என்பதை நன்றாக அறிந்து கொண்டு, ஒவ்வொரு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு விஷயங்களுக்கும் அரசு ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. உதாரணமாக, வேளாண்மைத்துறை சார்பாக உரங்கள், விதைகளுக்கு மானியம், பல வகையான இயந்திரங்களை வாடகை அடிப்படையில் எடுத்து பயன்படுத்துதல் என இதுபோன்று ஒவ்வொரு சிறு சிறு செயல்பாடுகளுக்கும் அரசு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. எனவே, அனைத்து திட்டங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பகுதி மானாவாரி பகுதியாக இருப்பதால், சில திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு என்று பிரத்யேகமாக எடுத்து வந்து செயல்படுத்தி கொண்டு வருகிறோம். குறிப்பாக, 1000 பண்னைக்குட்டைகள் அமைத்தல் என்பதை இலக்காக வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட பண்னைக் குட்டைகள் அமைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறோம்.
விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தை முழுமையாக, எந்தவித செலவும் இல்லாமல் கம்பெனி / நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (CSR) வாயிலாக செலவு செய்து, துறையின் சார்பாக செயல்படுத்தி தருகிறார்கள். இதற்காக, நீங்கள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகி, மனு அளித்து, இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதுமட்டுமின்றி 02-ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கவுள்ளது.
இந்த முகாமில் வருவாய்துறையின் சான்றுகளான பட்டா மாற்றம், பட்டா இரத்து உள்ளிட்டவை குறித்து மனு அளிக்கலாம். ஏற்கனவே, நீங்கள் மனு அளித்திருந்தீர்களானால் அதற்கு உரிய தீர்வு வழங்க கூறி துறை சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சினையும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், ஜுன் மாதம் பள்ளிகள் மறுபடியும் திறக்கப்படவிருக்கிறது. அதேப்போல் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் அளித்திருப்பார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் கல்லூரி பட்டப்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள்.
இதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குழு அமைத்து, அனைத்து தலைமையாசிரியர்கள் வழியாக ஒவ்வொரு மாணவ மாணவியர்களுக்கும் அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் எந்தெந்த துறைக்கு எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வழிகாட்டுதல்கள் அடிப்படையில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் அனைவரும் அதற்குரிய கல்லூரிகளில் விண்ணப்பம் அளித்து, கல்லூரியில் சேர்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் தொடர்பு முகாம் மட்டுமல்லாது, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் உங்களுடைய மனுக்களை அளிக்கலாம். நீங்கள் அளிக்கின்ற அனைத்து மனுக்களுக்கும் விரைவாக தீர்வு வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.
எனவே, இங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து விளக்க கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டு, எந்தெந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்கள் உங்களுக்கு பொருந்தும் என்பதை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு நீங்கள் இங்கேயே மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன், தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 இலட்சத்து 76 ஆயிரத்து 456 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன், பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக, பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன், பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராஜன், பொது மேலாளர் / இணை இயக்குநர், மாவட்ட தொழில் மையம் சொர்ணலதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பா.ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், மாவட்ட சுகாதார அலுவலர் (கோவில்பட்டி) வித்யா, கோவில்பட்டி வட்டாட்சியர் அப்பனராஜ், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ரத்தினகுமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பெ. மதன்ராஜா தூத்துக்குடி வருகை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி வரவேற்பு!
வியாழன் 28, மே 2026 5:39:27 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 28, மே 2026 4:48:35 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி!
வியாழன் 28, மே 2026 4:23:36 PM (IST)

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 28, மே 2026 4:16:19 PM (IST)

சீமானின் மகளுக்கு சீர் கொண்டு சென்றது ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கம்!
வியாழன் 28, மே 2026 4:04:29 PM (IST)

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவை : ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
வியாழன் 28, மே 2026 3:35:46 PM (IST)










