» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுயதொழில் தொடங்க ரூ.26.72 கோடி மானியம் வழங்கல் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, ஜனவரி 2025 5:26:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க இதுவரை 1571 நபர்களுக்கு ரூ.26.72 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய பங்காற்றுவதோடு வேலைவாய்பை உருவாக்குவதில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் வகிக்கிறது. குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் எண்ணிக்கையாலும் பரந்து விரிந்து அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுவதாலும் நாட்டின் தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்திகளாக திகழ்கின்றன. உலகளவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 90 விழுக்காடு பணியிடங்களையும், 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாடு முழுமைக்கும் பலதரப்பட்ட துறைகளில் வேலைiவாய்ப்பகளை வழங்கவும், பின்தங்கிய, நலிவுற்ற மற்றும் ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்கின்றன.
இந்தியாவில் சுமார் 6.3 கோடி குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் 45 விழுக்காடும், ஏற்றுமதியில் 45 விழுக்காட்டிற்கும் மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 விழுக்காட்டிற்கும் மேல் பங்களிப்பு செய்து நாடு முழுவதும் சுமார் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளில் தமிழ்நாடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நீண்ட வரலாற்றைக் கொண்ட மாநிலமாகும். மேலும், ஜவுளி, உலோக வேலைகள், மட்பாண்டங்கள், கப்பல் கட்டுமானம் போன்றவற்றுக்கு பிரபலமானது. இந்தியாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் 49.48 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருப்பதாக 73வது தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2015-16ன்படி மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள இந்த குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானவை குறு சிறு நிறுவனங்கள், 0.42 விழுக்காடு சிறு நிறுவனங்கள், 0.003 விழுக்காடு மட்டுமே நடுத்தர நிறுவனங்கள் ஆகும். இதுதவிர குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 51.25 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்காக பல்வேறு துறைகளில், பல்வேறு வகையான பல்லாயிரக்கணக்கான பொருட்களை இந்த குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. தோல் பொருட்கள், பொறியியல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், உலோக வார்ப்புகள், பம்புகள் மற்றும் ஆயத்த ஆடைகள் போன்ற முக்கிய உற்பத்தி துறைகளில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மின் வாகனங்கள், நிதி தொழில்நுட்பம் - மென்பொருள் சேவைகள் மற்றும் புத்தொழில் போன்ற பல வளர்ந்து வரும் துறைகளுக்கான மையமாகவும் தமிழ்நாடு உருவாகி வருகிறது.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையிலும், அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையிலும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வாயிலாக பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரதப் பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 27.01.2025 வரை படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 70 நபர்களுக்கு ரூ.394.11 மானியமும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 669 நபர்களுக்கு ரூ.764.21 இலட்சம் மானியமும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 338 நபர்களுக்கு ரூ.387 இலட்சம் மானியமும், பாரதப் பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 430 நபர்களுக்கு ரூ.525.26 இலட்சம் மானியமும், 2023-24-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 64 நபர்களுக்கு ரூ.601.35 இலட்சம் மானியமும் என மொத்தம் 1571 நபர்களுக்கு ரூ.26.72 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபார நிறுவனங்களுக்கு 25% மானியமும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 % முதல் 35 % வரை மானியமும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டும்) திட்டத்தின் கீழ் சேவை, உற்பத்தி மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு 35 % மானியமும், பாரதப் பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் உணவு பொருள் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு 35 % மானியமும், புதியதாக தொழில் துவங்கும் சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 % மானியமும் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.