» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
செவ்வாய் 28, ஜனவரி 2025 3:46:36 PM (IST)
கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறுவதற்கு சிறப்பு முகாம் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினருக்கான அடையாள அட்டைகள் வழங்கினார்.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி மற்றும் நியமனதாரர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை மற்றும் 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு நாள் நீட்டிப்பு: முகாமில் சுமார் 550 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 200 நபர்களுக்கு அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினராக பதவியேற்றம் செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மீதம் விடுபட்ட தொழிலாளர்கள் அடையாள அட்டை பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் மேலும் ஒருநாள் (29.01.2024 புதன்கிழமை) நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்தார்.
சிறப்பு முகாமில் மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் செயலாளர் சுசி. ரவீந்திரன், கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி, ஒன்றிய திமுக செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், கருப்பசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா, செயற்குழு உறுப்பினர் NRK. ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி ரவிக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.