» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமி பலி: 3 பேர் உயிருடன் மீட்பு; மற்றொரு சிறுமியை தேடும் பணி தீவிரம்!
வெள்ளி 17, ஜனவரி 2025 8:45:25 PM (IST)
முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்தாள். மேலும் ஒரு சிறுமியை தேடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாக அர்ஜுனன் மகள் வைஷ்ணவி (13), ஐயப்பன் மகள் மாரி அனுசியா (16) உள்பட சுமார் 15-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் முக்கூடல் அருகே வேளார்க்குளம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்கு தொடர் விடுமுறை ஒட்டி வந்துள்ளனர். தொடர்ந்து இன்று முக்கூடலிலுள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றுள்ளனர்.
இதில், சிறுமிகள் வைஷ்ணவி, மாரி அனுசியா உள்பட 5 பேர் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களது குடும்பத்தினர் கரையில் இருந்தனர், அப்போது சிறுமிகள் 5பேரும் ஆற்றில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் 3 பேரை பத்திரமாக உயிருடன் மீட்டனர். சிறுமிகள் வைஷ்ணவி மற்றும் மாரி அனுசியா ஆற்றில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற அம்பை, சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினர் சுமார் 15 பேர், முக்கூடல் பகுதி தன்னார்வலுடன் இணைந்து இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறுமி வைஷ்ணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.