» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ கவிழ்ந்து விபத்து: சிறுவன் பரிதாப சாவு
வெள்ளி 17, ஜனவரி 2025 9:03:48 AM (IST)
உடன்குடி அருகே திடீரென மாடு குறுக்கே வந்ததால் சாலையோரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நவீன். ஆட்டோ டிரைவர். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் சிவா (16). நேற்று நவீனும், சிவாவும் குமாரபுரத்தில் இருந்து திசையன்விளையில் உள்ள பாட்டி வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை நவீன் ஓட்டியுள்ளார்.
உடன்குடி - திசையன்விளை ரோட்டில் உள்ள தாங்கையூர் அருகே சென்று போது திடீரென்று மாடு குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க நவீன் ஆட்டோவை நிறுத்த முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்து சிவா சாலையோரத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நவீன் லேசான காயத்துடன் தப்பினார்.
இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிவாவை மீட்ட நவீன் உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் கண் எதிரிலேயே தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.