» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது!
சனி 18, ஜனவரி 2025 8:35:29 AM (IST)
கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புது கிராமம் நாராயண குரு திடலில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிக்கு, அங்கு வந்த இளைஞர்கள் இடையூறு செய்தார்களாம். அவர்களை சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோமதி சங்கர் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த ஹரி ஆகியோர் கண்டித்ததற்கு அந்த இளஞ்சிறார்கள், அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்து சென்றார்களாம்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் மேடையை அகற்றுப்பணி நடைபெற்ற போது அங்கு வந்த இளஞ்சிறார்கள் உள்பட 8 பேர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோமதி சங்கர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 7 இளஞ்சிறார்களை பிடித்து சிறுவர் நீதி குழுமத்தில் ஆஜர் படுத்தினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த இளையரசனேந்தல், அப்பனேரியைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி மகன் சூரிய குமார் (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.