» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி கல்லூரியில் பொங்கல் திருவிழா
திங்கள் 13, ஜனவரி 2025 4:33:23 PM (IST)
கோவில்பட்டி எஸ்எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி, ஏர் கலப்பை, மாட்டுவண்டியுடன் பொங்கல் திருவிழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி உறுப்பினர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் கல்லூரி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்து உரலில் மஞ்சள் இடித்து கரும்பு மற்றும் காய்கறிகளுடன் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனர்.
கல்லூரி மாணவர்கள் வேட்டி சட்டை அணிந்து ஏர் கலப்பை தோளில் சுமந்து மாட்டு வண்டியிலும் டிராக்டர் வண்டியிலும் ஊர்வலமாக சென்றனர். கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரியில் உள்ள 8 துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.