» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி : 2பேர் படுகாயம்!
செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:46:12 AM (IST)
திருச்செந்தூர் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பிறை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி (56). தொழிலாளி. தற்போது திருச்செந்தூர் அருகே ராணி மகாராஜபுரத்தில் குடியிருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ராணி மகாராஜ புரத்திலிருந்து ஆறுமுகநேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மெஞ்ஞானபுரம் சத்யா நகரை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் கார்த்திக் (22), செல்லத்துரை (40) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்துள்ளனர். அடைக்கலாபுரம் டாஸ்மாக் கடை அருகே வந்து கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார்த்திக், செல்லத்துரை ஆகியோர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அந்த 2பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர், 2பேரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.