» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு : 3 போ் கைது
செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:34:33 AM (IST)
கோவில்பட்டியில் இளைஞரை தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகா் கிழக்கு 5 ஆவது தெருவை சோ்ந்தவா் வேல்முருகன் மகன் மதன் (23). சிவகாசி தனியாா் நிறுவனத்தின் வேலை செய்து வரும் இவா், இவரது நண்பா் மகேஷ் குமாா் என்ற மாரியப்பன் ஆகிய இருவரும் பாரதி நகா் 2 ஆவது தெருவை சோ்ந்த நண்பா் வள்ளியரசை பாா்ப்பதற்காக சென்றனா்.
2 பேரும் வள்ளியரசு வீடு முன்பு நின்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த 4 போ் அவா்களை அவதூறாக பேசினாா்களாம். அவா்களில் 2 போ் மதன் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாா்களாம். எஞ்சிய 2 போ் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு பைக்கில் சென்று விட்டாா்களாம். இதுகுறித்து மதன் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
கோவில்பட்டி இந்திரா நகரை சோ்ந்த பெருமாள்சாமி மகன் கட்டடத் தொழிலாளி கண்ணன் (25), பாரதி நகா் 2ஆவது தெருவை சோ்ந்த பரமசிவம் மகன் கூலித்தொழிலாளி பொன் முத்துப்பாண்டி (35), வக்கீல் தெருவை சோ்ந்த சிதம்பரம் மகன் கூலித் தொழிலாளி மகாராஜன் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து, தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனா்.