» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே சூறாவளி காற்றில் பனைமரம் முறிந்து விழுந்தது : மின்கம்பங்கள் சேதம்!
செவ்வாய் 31, டிசம்பர் 2024 8:30:34 AM (IST)
தூத்துக்குடி அருகே நேற்று மாலை திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக பனைமரம் முறிந்து விழுந்தது. இதில், பல மின்கம்பங்களும் சேதமடைந்தன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலின மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன்படி நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான மேகமூட்டம் வந்து சென்றது. மதியத்துக்கு பிறகு மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது சாரல் மழை பெய்தது. மாலையில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் காற்றில் ஒடிந்து விழுவது போன்று ஆடிக் கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் கெபி அருகே உள்ள ஒரு பனைமரம் பாதியில் இருந்து முறிந்து அருகில் இருந்த மின்சார ஒயரில் விழுந்து, கெபியின் சுற்றுச்சுவரில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து வயர்கள் துண்டிக்கப்பட்டதால், அந்தோணியார்புரத்தில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மேலும் 3 பனைமரங்களையும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.