» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் கைது!
திங்கள் 30, டிசம்பர் 2024 5:23:08 PM (IST)
சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளார் புஸ்லி ஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பெஞ்சல் புயலுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து விஜய் தன் கைப்பட எழுதிய கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் நகலெடுத்து கல்லூரிகள் மாணவிகள், பொதுமக்களிடம் வழங்கி வந்தனர்.
சென்னையில் தடையை மீறி விநியோகம் செய்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட மகளிர் அணியினரை போலீசார் திநகரில் வைத்து கைது செய்தனர். இதனைக் கண்டித்தது தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் அருகே ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலா தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தென்பாகம் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுபோல் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் பலர் கலந்து காெண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து காெண்டவர்களை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.