» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவிகளின் கல்வியோடு விளையாடுவதா? அமைச்சர் பி.கீதாஜீவன் கண்டனம்!

திங்கள் 30, டிசம்பர் 2024 3:53:43 PM (IST)

"சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி” என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கே எது நடக்கும் அதில் நமக்கென்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும் என அலைந்து கொண்டிருக்கும் பழனிசாமி, படிக்கவரும் கல்லூரி மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அருவருக்கத்தக்க செயல். உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு உரிய பதில் அளித்துவிட்டபோதும் தனது சுய அரசியல் ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை இருப்பது போல மேலும் மேலும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பின்னிருந்த அதிமுக பிரமுகர்களை காப்பாற்றவும், அதிமுக இளைஞரணியின் பொள்ளாச்சி நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருளானந்தத்தை காப்பாற்றவும் பாதிக்கப்பட்ட பெண்களையே அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டிய கொடூரம் நடந்ததை தமிழக மக்கள் என்றும் மறக்கவே மாட்டார்கள். அதுமட்டுமா, உதவி கேட்டு வந்த பெண்ணை "மெயின் ரோட்டிற்கு வா” என முன்னாள் அதிமுக அமைச்சரே பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த அசிங்கமும் அதிமுக ஆட்சியில்தானே அரங்கேறியது. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்திவிட்டு தற்போது பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் போல நடிப்பது அபத்தம்.


புதுமைப் பெண் திட்டம் , பெண்கள் விடியல் பயணம் , மகளிர் உரிமைத் தொகை என பெண் கல்விக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீதும் தமிழக முதல்வர் மீதும் என்ன அவதூறு பரப்பினாலும் அதை தமிழக பெண்கள் துளியும் நம்பபோவதில்லை. எடப்பாடி ஆட்சியில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியே வந்து சொல்லவே பயப்பட்ட நிலை இருந்தது. புகார் பெறவே மாட்டார்கள், ஒருவேளை புகாரை பெற்றுக்கொண்டாலும் எப்ஐஆர் பதிவு செய்ய மாட்டார்கள்.

அந்த நிலை மாறி தற்போது திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் தைரியமாக வெளியே வந்து தங்களுக்கு நேரந்த கொடுமையை சொல்கிறார்கள் என்றால் அது முதல்வர் மீது தமிழக பெண்கள் வைத்துள்ள நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை இந்த திராவிட மாடல் அரசு என்றும் காக்கும். மாணவியின் புகாரை பெற்ற உடனே எவ்வளவு விரைவாக செயல் பட்டு விசாரணை நடத்தி குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தேவையின்றி அரசியல் செய்வதையும் வதந்திகளை பரப்பி மாணவிகளின் கல்வியோடு விளையாடுவதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.

நீங்கள் என்னதான் அச்சுறுத்தி பெண்களை வெளியே வராதே, படிக்க வராதே என மறைமுகமாக தடுக்க முயன்றாலும் தமிழக பெண்கள் தைரியமாக வெளியே வந்து வாழ்வின் உயர்நிலைக்கு செல்வார்கள் அதற்கு இந்த திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த இந்த சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழிதோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அவரது இந்த அற்பத்தனமான செயலை தமிழக மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory