» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தரமற்ற வீட்டை கட்டிய ஒப்பந்தகாரர் ரூ.19.17 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
புதன் 25, டிசம்பர் 2024 8:59:28 PM (IST)
தூத்துக்குடியில் தரமற்ற முறையில் வீட்டை கட்டி கொடுத்த ஒப்பந்தகாரர் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரத்து 396 வழங்க வேண்டுமென நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடியைச் சார்ந்த ஜோதிமணி என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஒப்பந்தகாரரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்துள்ளார். வங்கிக் கடன் மற்றும் அயல்கடன் ஆகியவற்றை பெற்று அதற்கான தொகையையும் செலுத்தி விட்டார். ஒப்பந்தத்தில் கூறியபடி தரமான சிமெண்ட் மற்றும் இதர பொருட்களை உபயோகிக்காததால் தரமற்ற முறையில் கட்டிடத்தை கட்டியிருப்பதால் வீடு பாதுகாப்பாக வசிக்கக் கூடிய சூழ்நிலையில் அமையவில்லை.
மேலும் கட்டிடத்தில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்த நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் வீட்டை ரிப்பேர் செய்வதற்கான பணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்கடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து பெற்ற தொகையான ரூ. 18 இலட்சத்து, 12ஆயிரத்து 396 ரூபாயை செலுத்த வேண்டுமென்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈட்டு போய் ஒரு இலட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் போய் 19லட்சத்து 17ஆயிரத்து 396 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.