» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: விஜய் வசந்த் எம். பி இரங்கல்.
சனி 14, டிசம்பர் 2024 7:37:12 PM (IST)
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ. வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு விஜய் வசந்த் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் ஈரோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மூத்த தலைவர் ஈ. வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்த காலகட்டத்தில் அவர் கட்சியை பலப்படுத்த எடுத்த முயற்சிகள் சிறப்பு மிக்கவை. மத்திய அமைச்சராக அவர் செயல்பட்டு ஆற்றிய சேவைகள் போற்ற தக்கவை. என்றும் காங்கிரஸ் கட்சியின் போர் படை வீரராக விளங்கி, காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் தன்மானத்தை பாதுகாக்க அவரது பேச்சும் எழுத்தும் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டன் மனதிலும் நிலைத்து நிற்கும்.
இத்தகைய ஒரு தலைவரை இழந்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்க குடும்பத்தினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.