» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழை வெள்ளம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
சனி 14, டிசம்பர் 2024 5:27:14 PM (IST)
தூத்துக்குடியில் தொடர் கனமழையால் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி தொடர்ச்சியாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடியில் 3வது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு பாளையங்கோட்டை ரோடு பைபாஸ் மாவட்ட தொழில் மையம் அருகே பக்கில் ஓடையின் வழியாக தடையின்றி வெள்ள நீர் வெளியேறுகிறதா என்று அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பார்வையிட்டதுடன், அங்கு செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்தார். பிறகு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை பார்வையிட்டு, வெள்ள நீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தினார். பிறகு வெற்றிவேல்புரம் பகுதியில் உள்ள மின்மோட்டார் அறையின் செயல்பாட்டை ஆய்வு செய்தார். தொடர்ச்சியாக திரேஸ்புரம் பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டார்.
அதன் பிறகு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள உப்பாற்று ஓடை வழியே வெள்ளநீர் வெளியேறுவதை நேரில் சென்று பார்வையிட்டார். பிறகு கேம்ப்-1 ல் உள்ள செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார். பிறகு மீன்வளக்கல்லூரி அருகே பெரியநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து உரையாடினார்.
தொடர்ச்சியான இந்த பணிகளுக்கு இடையே தூத்துக்குடி மாநகராட்சி - 49வது வார்டுக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து உரையாடி, அவர்கள் கோரிக்கையின் படி ஜேசிபி இயந்திரம் மற்றும் உபகரணங்கள் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்து வெள்ள நீர் அந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் தடுக்க ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.