» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் அணையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

சனி 14, டிசம்பர் 2024 4:50:59 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பலத்த மழையாக தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு சுமார் 60ஆயிரம் கனஅடிக்கும் மேற்பட்ட வகையிலான மழைவெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து வெளியேறும் மழைவெள்ளநீர் குறித்து தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஒவ்வொரு விநாடிக்கு ஒருமுறையும் வெளியேறும் தண்ணீரின் அளவு, ஆற்றில் வரும் நீர்வரத்து, பாசன வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் அளவு குறித்தும், கரையோரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நீர்வளத்துறையினரிடம் விரிவாக கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து ஆழ்வார்திருநகரியில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள வ.உ.சி.நகர், கக்கன் நகர் பகுதிகளை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, தேங்கி கிடக்கும் மழைநீரை துரிதமாக வெளியேற்ற உத்தரவிட்டார். ஆய்வுப்பணிகளை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பெரும் அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் மக்கள் அச்சப்படவேண்டாம்.

கரையோர மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதன்அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்குவதற்தாக 44 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில் 774 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தேவையான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவராஜன், டவுன்.பஞ்சாயத்து செயல் அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், கால்நடை மருத்துவர் அன்டணி சுரேஷ்குமார், திமுக மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ., டேவிட்செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், இளைஞரணி பில்லாஜெகன், பாலமுருகன், வழக்கறிஞர் செல்வக்குமார், ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் சுப்புராஜ், திமுக நிர்வாகிகள் பெருமாள், குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory