» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் தங்க அனுமதி இல்லை : பக்தர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!
சனி 14, டிசம்பர் 2024 4:37:30 PM (IST)
தீவிரமான கடற்காற்று மற்றும் வலுவான கடல் நீரோட்டங்கள் காரணமாக திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் குளிக்கவும், இரவு முழுவதும் கடற்கரையில் 15.12.2024 அன்று பௌர்ணமி நாளில் தங்கவும் யாருக்கும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்த போக்குவரத்து சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலுக்கு 14.12.2024 மற்றும் 15.12.2024 ஆகிய இரண்டு நாட்களும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 14.12.2024, 12.15-மணிக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி 15.12.2024 பௌர்ணமி நாளில், 55 கி.மீ/மணிக்கு வரை பலத்த காற்றும், 0.9 மீ/வினாடி முதல் 1.1 மீ/வினாடி வரை கடல் நீரோட்டமும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் குளிக்கவும், இரவு முழுவதும் கடற்கரையில் தங்கவும் யாருக்கும் அனுமதி இல்லை. இந்த அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.