» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முக்காணி ஆற்றுப்பாலத்தை தொட்டுச் செல்லும் வெள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்!
சனி 14, டிசம்பர் 2024 4:13:35 PM (IST)
மழை வெள்ளம் காரணமாக முக்காணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக முக்கிய இணைப்பு பாலமாக விளங்கும் முக்காணி ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனால் நேற்று இரவு முதலே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த முக்காணி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பாதுகாப்பு நலன் கருதி இருபுறமும் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் ஆற்றில் வரும் தண்ணீரை பார்க்க வரும் பொதுமக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே மழைக்காலங்களில் இந்த தரைமட்டப் பாலத்தின் மேல் வெள்ளம் தாண்டிச் செல்லும் என்று கூறி தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதன் அருகே மற்றொரு உயர்மட்டப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பாலத்தின் நடுப்பகுதியும் கடந்த வருடம் வந்த வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டது. அந்த பாலத்தின் பாதிக்கப்பட்ட பகுதி தற்போது வரை சரி செய்யாததால் அந்த உயர்மட்டப் பாலத்திலும் பாதுகாப்பு கருதி வாகனங்களை இயக்க அனுமதிக்கவில்லை.
இதனால் திருச்செந்தூர் பகுதியில் இருந்து தினமும் தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளுக்கு வேலைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாற்றுப்பாதை வழியாக போக்குவரத்து இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
KumarDec 14, 2024 - 04:26:00 PM | Posted IP 162.1*****
பீகார்தான் பின்தங்கிய மாநிலம் என்றால் அதைவிட தமி்ழ்நாடு படுமோசமாக உள்ளது ஒருவருடம் ஆகியும் பழுதான பாலம் சரிசெய்யாமல் இருக்கிறார்கள்
ஆட்டோகாரன்Dec 16, 2024 - 10:13:04 PM | Posted IP 172.7*****