» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிலத்தை மோசடியாக விற்றவருக்கு 6 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 13, டிசம்பர் 2024 9:08:12 PM (IST)
தூத்துக்குடியில் நிலத்தை மோசடியாக ஆவணம் செய்து அதை சகோதரர்கள் இருவரிடம் விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருச்செந்தூர் குறுகாட்டூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் சின்னதுரை (69) என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்தையாபுரம் முஸ்லிம் தெரு பகுதியில் வசித்து வந்த போது அதே காம்பவுண்டில் வசித்து வந்த படிப்பறிவு இல்லாத ஐயப்பன் மனைவி பகவதி (69) என்பவரது அடையாள ஆவணங்களை வாங்கி அதன் மூலம் முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியில் இல்லாத ஒரு நிலத்தை பகவதியின் பெயரிலிருந்து தனக்கு மோசடியாக பொது அதிகாரத்தை (Power) பெற்றுள்ளார்.
இதனையடுத்து சின்னத்துரை அந்த பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி (Power Document) கடந்த 2013 ஆம் ஆண்டு நாசரேத் மில் ரோடு பகுதியைச் சேர்ந்த தனராஜ் மகன் ஆனந்த் ஜேசுராஜ் சாலமோன் (45) என்பரிடம் ரூபாய் 3 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டும், மேற்படி தனராஜின் மற்றொரு மகனான பிராங்கிளின் இன்பராஜ் (42) என்பவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டும் மேற்படி இல்லாத போலி நிலத்தை பத்திர பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மேற்படி நிலங்களை சில வருடங்களுக்குப் பிறகு நில அளவை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது சின்னத்துரையிடமிருந்து வாங்கிய நிலம் அந்தப் பகுதியில் இல்லை என்பதும் இல்லாத நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததும் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆனந்த் ஜேசுதாஸ் சாலமோன் மற்றும் பிராங்கிளின் இன்பராஜ் ஆகிய இருவரும் கடந்த 2019 ஆண்டு அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்து மேற்படி எதிரியை கைது செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்டம் குற்றவியல் நீதிமன்றம் - IV நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி குபேரசுந்தர் நேற்று (11.12.2024) இவ்வழக்குகளின் குற்றவாளியான சின்னத்துரை என்பவருக்கு இரு வழக்குகளிலும் தலா 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 5,000/- அபராதமும் விதித்தும் பகவதியை இவ்வழக்குகளிலிருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
m.sundaramDec 14, 2024 - 09:48:51 AM | Posted IP 172.7*****