» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாண்டிய மன்னன் தேர்மாறன் நினைவிடத்தை தனிநபர்கள் புதுப்பிக்க தடை கோரி வழக்கு
வெள்ளி 13, டிசம்பர் 2024 8:21:41 AM (IST)
தூத்துக்குடியில் பாண்டிய மன்னன் தேர்மாறன் நினைவிடத்தை தனிநபர்கள் புதுப்பிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த எழிலன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழ் மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். கடலில் முத்து அறுவடை, மீன்பிடித்தல் மற்றும் இது தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன். பாண்டிய மன்னன் தேர்மாறன் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டவர். கட்டபொம்மன், ஊமைத்துரை அணியில் இருந்தார்.
1753-ம் ஆண்டு பிறந்த தேர்மாறன் பாண்டியன், 1779-ம் ஆண்டு தூத்துக்குடி பகுதியில் ஆட்சி புரிந்தார். 1808-ம் ஆண்டில் இறந்தார். அவரது நினைவிடம் (கல்லறை) தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ளது. இந்த பகுதியை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறது. இந்தநிலையில் அவரது பிறந்தநாள் இன்று (13-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனிநபர்கள் சிலர், தேர்மாறன் நினைவிடத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன்மூலம் நினைவிடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர நினைக்கின்றனர். அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Ezhilan.MDec 13, 2024 - 10:57:36 AM | Posted IP 172.7*****