» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியில் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு விழா!
சனி 7, டிசம்பர் 2024 5:54:43 PM (IST)
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.1 கோடியே 9 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தை கனிமொழி எம்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், இன்று (07.12.2024) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் சீரிய முயற்சியால் சமூகப் பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.71.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தினையும், ரூ.25 இலட்சம் செலவில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தினையும் மற்றும் ரூ.6.50 இலட்சம் செலவில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அறை கட்டடத்தினையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வல்லநாடு வந்தபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் அளித்தனர். அக்கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று புற நோயாளிகள் பிரிவு பழைய கட்டிடமும் ரூ.25 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை அறை கட்டடம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள அரசுப் பள்ளியின் முன் பகுதியில் ரூ.6 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக மகிழ்ச்சி அடைகின்றேன். திராவிட மாடல் ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அடையாளம் காணப்படும் நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்த படியே மருந்துகளைப் பெற உதவும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள்.
மேலும், இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட வருமுன் காப்போம் திட்டத்தை கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆரம்ப கட்டத்திலே அதாவது நோய் வருவதற்கு முன்பாக சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் சுற்றுப்புற சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, 5 கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், துணை இயக்குநர் யாழினி (சுகாதாரப் பணிகள்), கருங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இரா.கோமதி, வல்லநாடு வட்டார மருத்துவ அலுவலர் அ.கிருஷ்ணஜோதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.