» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறந்த கடல் மாலுமியாக புன்னக்காயல் மாலுமி தேர்வு
சனி 7, டிசம்பர் 2024 3:42:34 PM (IST)
2024 ஆம் ஆண்டின் சிறந்த கடல் மாலுமியாக புன்னக்காயலைச் சேர்ந்த மாலுமி அன்டன் பல்தான் என்பவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலைச் சேர்ந்த பீற்றர் பல்தான் மகன் அன்டன் பல்தான் என்பவருக்கு இந்த ஆண்டின் (2024) சிறந்த கடல் மாலுமியாக Seafarer of the year 2024 என்ற விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து அகில இந்திய மீனவர் சங்கம் தேசிய தலைவர் அன்டன் கோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :
இந்த விருது Sea line group வழங்கும் Seajob Anchor Award 2024 ன் Seararer of the year2024 என்பதாகும். மாலுமிகள் உலகில், பல தலைமுறைகளாக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள புன்னை மண்ணுக்கு கிடைத்த, சிறப்பான முத்திரை! உயிருக்கு போராடிய, மற்றொரு கப்பல் மாலுமிகளை காக்க, உயிரை பணயம் வைத்து, செயலாற்றிய தீர செயலுக்கு கிடைத்த விருதாக அறிகிறேன்.
நெய்தல் நில சொந்தங்கள்,சக மானுடர்களின் உயிரை காக்க தன்னுயிரை பணயம் வைக்கும் வீர மறவர்கள் என்பதை, உலகளாவிய கடல் மாலுமிகளும்,தாய் தமிழ் மண்ணில்,பேரிடர்கால மீட்பு பணியின் தியாகத்தால்,தமிழ் உறவுகளும் அறிவர்!
இதனை அங்கீகரிக்க மத்திய,மாநில அரசுகள் மறந்தாலும்,மறுத்தாலும், அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மேற்கண்டஇந்த விருது புன்னை மைந்தனுக்கு வழங்கப்பட்டிருப்பது, புன்னை மக்கள் மட்டுமன்றி,அனைத்து தமிழ் கடல் மாலுமிகள், நெய்தல் பரம்பரைக்கும் ஆறுதல் அளிக்கும் மகிழ்வானசெய்தியாகும்!
மாலுமிகள் உலகு போற்றிய,நெய்தல் மறவர்களின் கோரிக்கைகளான, கடல்சார் தொழில், கல்வி,ஆராய்ச்சி மற்றும் கப்பற்படை, கடலோர காவல் படை, பேரிடர் மீட்பு பணி குழுவில் முன்னுரிமையும், இட ஒதுக்கீடும் தர, பிறப்பால் பாரம்பரிய மீனவன் என்பதை அடிப்படை தகுதியாக கொண்டு CDC ( Continues discharge certificate)_ வழங்க வேண்டும், மாலுமிகளின் பணியில், ஊதியத்தில், விபத்தால், உயிரழப்பால் ஏற்படும் இன்னல் களைய, மத்திய,மாநில அரசுகள் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், மீனவர்களின் வீர,தீர சாகசங்கள் குடியரசு நாளில் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற, எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை, நினைவுறுத்துகிறேன், வலியுறுத்துகிறேன்.
எனது அன்பு மாமா மகன் அன்டன் பல்தான் அவர்கள், இளம் வயதில் கடல் மாலுமியாக வாழ்க்கையை தொடர்ந்தார், சமூக பணியில் ஈடுபாடு கொண்டவர், தனது பணி விடை பெறும் காலம் நெருங்கும் வேளையில், இவ்விருது அவரை தேடி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது போல் பல உயிர்காப்பு சாகசங்கள் புரிந்து, மாலுமிகளின் மனதில் நீங்காது வாழும், புன்னைக்காயல் உள்ளிட்ட அனைத்து தமிழக மாலுமிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நமக்கு வழிகாட்டிகளாக, வாழ்ந்து, ஓய்வு பெற்ற, மறைந்த வீர, தீர முன்னோடி மாலுமிகளையும் பெருமையுடன் நினைவு கொள்வோம்! இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.