» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மண் வளமாக இருந்தால் தான் மக்கள் வளமாக இருப்பார்கள்: ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு
வியாழன் 5, டிசம்பர் 2024 5:09:43 PM (IST)
மண் வளமாக இருந்தால் தான் மக்கள் வளமாக இருப்பார்கள் என "உலக மண் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், வேளாண்மைத்துறை சார்பில், கோவில்பட்டி தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் இன்று(05.12.2024), நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தாவது: உலகில் பூமியில் மட்டும் உயிர்கள் தோன்றி இருப்பது அனைவருக்கும் வியப்பை அளிக்கக்கூடிய இயற்கை செய்த ஒரு அற்புதமாகும். மானுடம் செழித்து பல்லுயிர் பெருகி மனித நலம் காத்திட ஆரோக்கியமான மண்ணே அடிப்படையும் அவசியமும் ஆகும். மண் வளமாக இருந்தால்தான் மக்கள் வளமாக இருப்பார்கள் என்பது பழமொழி. பசுமைப் புரட்சியின் விளைவாக உயர் விளைச்சல் இரகங்களையும் இரசாயன உரங்களையும் பயன்படுத்தி தீவர சாகுபடி செய்ததால், இந்தியாவின் உணவு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது.
ஆனால், சமீப காலமாக பயிர்களின் உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது. தீவிர வேளாண்மையின் பயனாக மண் அரிமானம், நீர் பற்றாக்குறை, மண்ணில் களர் மற்றும் உவர் தன்மை உரங்கள் பூச்சி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகளால் ஏற்படும் மாசுபாடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை ஏற்பட்டு உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்துவதற்கும் மண் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு வழிவகுக்க உலக மண் தினம் டிசம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த உலக மண் தினம் சர்வதேச மண் அறிவியல் அங்கத்தினால் 2002ம் ஆண்டு மனித நல்வாழ்வுக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக உலக மண்தினமாக குறிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முன் முயற்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர் தாய்லாந்து மன்னர் மறைந்த பூமிபோல் அதுல்யதேஜ். இவருடைய பிறந்த நாளுடன் இந்த நாள் ஒத்திருப்பதால் உலக மண்தினம் டிசம்பர் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மண் வளம் என்றால் என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஒரு பயிர் வளர்வதற்கு தேவையான ஊட்டங்களையும் போதிய சூழ்நிலையும் அளிக்கும் திறன் என்பதே மண் வளம் எனப்படும். தமிழ்நாட்டு மண் வகைகளில் கரிமப் பொருட்களின் அளவும் தழைச்சத்தின் அளவும் குறைவாக உள்ளது. மண் வள மேம்பாட்டில் இவை இரண்டும் இரண்டு கண்கள். எனவே மண் வளத்தை மேம்படுத்தவதற்கு நமது மண்ணில் கரிமப் பொருள் தழைச்சத்தை அதிகரிக்க வேண்டும். வளமான மண்ணில் கனிமம் 45 சதவீதமும், நீர் மற்றும் காற்று 50 சதவீதமும் கரிமம் 5 சதவீதமும் இருக்கும். தமிழ்நாட்டு மண் வகைகளில் 1970ம் ஆண்டு 0.80 சதம் இருந்த கரிம அளவு தற்போது 0.41 சதவீதம் என்ற அளவாக குறைந்து விட்டது.
இந்த மண் வள தினமானது மண்ணில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களையும் மண் வள இடர்பாடுகளையும் கண்டறிவதற்கான விழிப்புணர்வு தினமாகவும் மற்றும் மீள்தன்மை கொண்ட வேளாண் உணவு முறைகளை அடைவதற்கான பங்கெடுப்புகளை முன்னெடுப்பு செய்வதற்கான நாளாகவும் அமைகிறது. மண் மேலாண்மை முறைகளை பின்பற்றி சாகுபடி செய்திட இந்த மண் வள தினத்தன்று உறுதி பூண வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய நிலத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
மண் வளமாக இருந்தால் மட்டுமே நாம் கொடுக்கக்கூடிய இடுபொருட்கள் பலனளிக்கும். விவசாயத்தில் நாம் செய்யக்கூடிய அத்தனை செயல்பாடுகளும் மண் வளத்தை மேம்படுத்தக்கூடியதாகவும் மண் நலத்தை பேணிக்காப்பதாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மிக சிறப்பாக வழங்கி வருகிறது. இதனை விவசாயிகள் பயனுள்ள வகையில் அறிந்து பயன்பெற வேண்டும்.
இந்த உலக மண் தினமான 2024ம் ஆண்டு கருப்பொருளை நினைவில் கொண்டு மண்ணைப் பராமரிப்பது பற்றிய செயல்பாடுகளில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். மண்ணைப் பரிசோதித்து மண் வள அட்டையைப் பெற்று அதற்கேற்றபடி உரங்களை இட்டு மகசூலை பெருக்க வேண்டும். மானாவாரி விவசாயிகள் முக்கியமான இடுபொருளான தொழுஉரத்தை இட்டு மண் வளத்தை பேணிக்காக்க வேண்டும். மாறிவரக்கூடிய காலசூழ்நிலையில் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான மண் மட்டுமே ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியும். மண்ணை தின்று வாழ்ந்த மனித ஜாதி வழி நாம் உதித்தோம் மண்ணின் பெருமை பேசுவதோடு மட்டுமல்லாமல் அதனை பாதுகாப்போம் எனவும் இந்நாளில் உறுதி ஏற்போம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் கோவில்பட்டியில் வைக்கப்பட்டிருந்த தொழில் நுட்ப கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் பாக்கியதுல்லா ஷாலிகா, இணை பேராசிரியர் குரு, வேளாண்மை இணை இயக்குநர் இ.ரா.பெரியசாமி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் தோட்டக்கலை துணை இயக்குநர் மா.சுந்தரராஜன், துணை இயக்குநர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் கா.கருப்பன், உதவி பொது மேலாளர் (விற்பனை விரிவாக்கம்) ந.ராஜேந்திரன், மண்டல மேலாளர் (விற்பனை) வே.சி.அருணாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.