» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோசமான வானிலை: தூத்துக்குடி வந்த விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது!
வியாழன் 21, நவம்பர் 2024 11:10:33 AM (IST)
மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி வந்த விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் விமான சேவைகளை இயக்கி வருகிறது இண்டிகோ நிறுவனம். தினசரி சுமார் 8 விமானங்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்கின்றன. காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் இண்டிகோ விமானம் 7.35 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
அந்தவகையில் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானம் தூத்துக்குடி சென்ற நிலையில் வானிலை மோசமாக காணப்பட்டது. இதனால் அங்கு தரையிறக்க முடியவில்லை. சில நிமிடங்கள் வானிலேயே வட்டமடித்தது. வானிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. அதில் இருந்த 77 பயணிகளும் மதுரையிலேயே தரையிறக்கப்பட்டனர்.
சென்னை - தூத்துக்குடி விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணம் செய்திருந்தார். அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பயணிகள் அனைவரும் மதுரையிலேயே இறங்கினர். இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.