» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தினை மேலும் தரம் உயர்த்த நடவடிக்கை : அமைச்சர் பி.கீதாஜீவன்

வியாழன் 21, நவம்பர் 2024 3:30:16 PM (IST)



தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தினை இன்னும் தரமானதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உலக மீன்வள தின விழாவில் இன்று (21.11.2024) சமூக நலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் சிறப்புரையாற்றி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொரிவித்ததாவது: நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவுப்படி கடந்த 3 ஆண்டுகளாக மீனவர் தின விழா இதே இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீனவர்களுக்கான பிரத்யேக வங்கி ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தீர்கள். அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நம்முடைய தூத்துக்குடி நகரத்திலே மீனவர்களுக்கென தனியான வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இந்த வருடத்தில் இருந்து அனைவருக்கும் அந்த நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை இராமநாதபுரத்திற்கு நம்முடைய முதலமைச்சர் வருகை புரிந்த போது இந்தப்பகுதியில் உள்ள மீனவ மக்கள் நீண்ட காலமாக பட்டா இல்லாமல், தங்களுடைய குடியிருப்பு நிலத்திற்கு உரிமை இல்லாமல் இருந்தார்கள். தற்போது அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலருக்கு விடுபட்டுள்ளது. 

விடுபட்டுள்ளவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கு நமது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்கள். இந்த பட்டாக்கள் எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டது. முதன்முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மீனவரை அறிவித்ததன் மூலமாகத்தான் நம்முடைய குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியில் படிப்பு போன்றவற்றில் படிக்க எளிதாக வாய்ப்புகள் கிடைக்கின்றது. இவ்வாறு வேலைவாய்ப்பை உருவாக்கியிருப்பது முத்தமிழறிஞர் நம்முடைய கலைஞர் தான். 

நிறைய குழந்தைகள் இன்று மருத்துவர் மற்றும் பொறியாளர் ஆகிறார்கள் என்றால் இந்த அளவிற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததும் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர், அவர் வழியில் இன்று தளபதியாரும் நல்ல பல திட்டங்களை நமக்கு செய்து வருகிறார்கள். மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளது. அதேபோல் திரேஸ்புரம் கடற்கரை முழுமையாக சீரமைக்கப்பட்டு அங்குள்ள பாலங்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. ஹை மாஸ் லைட்கள் கடற்கரையில் அமைத்துள்ளோம். மீன்பிடித் துறைமுகத்தினை இன்னும் தரமானதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பல்வேறு தரப்பட்ட முறையில் உங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிட வேண்டும், உங்களுக்கு உறுதுணையாக அரசு இருந்திட வேண்டும் என்ற முறையில் தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்கள். அவர் இடும் பணிகளை உங்களுக்காக செய்து தருபவர்களாக நாங்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறோம் என்பதை கூறிக்கொண்டு அனைவருக்கும் உலக மீனவர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவ, தெரிவித்ததாவது:
உலகின் பெரும் பகுதியை சூழ்ந்துள்ள கடல் மக்களுக்கு புரதம் மிகுந்த சத்தான உணவு வழங்குவதிலும் உணவு பாதுகாப்பு அளிப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, பல இலட்சக்கணக்கான கடலோர மற்றும் உள்நாட்டு பகுதிகளில் உள்ள எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் ஆதாரமாக விளங்குகிறது. இவ்வளங்களைச் சார்ந்து வாழும் மீனவ மக்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் உலக மீன்வள தினம் 1997-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலக மீன்வள தினம் கொண்டாடுதல் என்பது பாரம்பரிய மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கும் மற்றும் சிறு அளவிலான மீன்வளர்ப்போருக்கும் ஏற்படும் சவால்களை முன்வைத்து அவற்றிற்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான தினம் ஆகும். அதற்கேற்றாற்போல், இந்த ஆண்டு நீடித்த நிலையான மீன்வளம் மற்றும் சிறு அளவிலான மீனவர் மற்றும் மீன்வளர்ப்போரை ஊக்குவித்தல் (Strengthening small- scale and sustainable fisheries) என்ற கருப்பொருளில் உலக மீன்வள தினம் கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட 7,515 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டிருக்கும் இந்தியாவில் சுமார் 1,076 கி.மீ கடற்கரையை தமிழகம் கொண்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டமானது வடக்கில் வேம்பாரில் இருந்து தெற்கில் பெரியதாழை வரை 163.5 கி.மீ நீளமுள்ள எழில்மிகு கடற்கலையை கொண்டுள்ளது. சுடலை மட்டுமே நம்பிவாழும் சுமார் 74,000 மீனவமக்கள் தலைமுறை தலைமுறையாக மீன்பிடித்தொழில் ஈடுபட்டுவரும் சிறப்புமிக்க மாவட்டமாக திகழ்கிறது. மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், கடல், உள்நாடு மற்றும் உவர்நீர் பகுதிகளில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த மேலாண்மை நடைமுறைகளைப் பயன்படுத்தி மீனவர்களும் மீன் வளர்ப்போரும் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கிட அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

கடல் மீன்வளத்தினை நீடித்த முறையில் பேணிப்பாதுகாத்திட பொறுப்பார்ந்த முறையில் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடாமல் இருத்தல், உகந்த கன்னி அளவுள்ள சுற்றுச்சூழலுக்குகந்த வலைகளை பயன்படுத்துவதன் மூலம் முழுதும் வளர்ச்சி அடையாத சிறு மீன்கள் பிடித்தலை தவிர்த்தல், மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடுகளை பின்பற்றி, சட்டவிரோத மற்றும் அறிவிக்கப்படாத மீன்பிடிப்பினை (illegal Unreported Unregulated) தவிர்த்தல், கடலின் சுற்றுச்சூழலை காக்கும் வண்ணம் கடல் மாசுபடுவதை கட்டுப்படுத்துதல், நெகிழிப்பொருட்களை தவிர்த்தல் சுற்றுசூழலுக்குகந்த நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டு மீன் உற்பத்தியினை அதிகரித்தல் போன்ற முன்னெடுப்புகளில் நாம் ஆர்வமுடன் பங்கு கொள்ள வேண்டும்.

இந்நன்நாளில், கடல் வளங்கள், பொறுப்பார்ந்த மீன்பிடி முறைகள் மற்றும் நிடித்த நிலையான மீன்வளர்ப்பு முறைகள் குறித்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எதிர்கால தலைமுறைகளுக்கான மீன்வளங்கள் மற்றும் கடல் சூழல்களை பாதுகாக்க உறுதி ஏற்போம் என உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உலக மீன்வள தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்வர்ட் ஜான், துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டல இணை இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ந.சந்திரா, உதவி இயக்குநர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தி.விஜயராகவன் (மீன்பிடித் துறைமுக மேலாண்மைப்பிரிவு), புஷ்ரா பேகம் (மீனவர் நலன்), தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் அந்தோணி ஸ்டாலின், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸிலின், உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள் மீனவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory