» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி: சிபிஎம் கோரிக்கை!
புதன் 13, நவம்பர் 2024 3:19:19 PM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கிராம பகுதியில் சாதாரண மக்கள் வசித்து வருகின்றனர். சாதாரணமக்கள் சிகிச்சைக்கு ஆங்காங்கே உள்ள அரசு மருவத்துவ மனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பார்த்து வருகின்றனர்.
அங்கு மருத்துவம் பார்க்க முடியாத நோயாளிகளும் தீவிர சிகிச்சை மற்றும் விபத்து உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவ மனையை நாடுகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். எளிய மக்கள் இலவசமாகவும் குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதற்காக அரசு மருத்துவ மனையை தேர்வு செய்கின்றனர்.
இவ்வாறு இருக்கும் போது மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் MRI Scan டெனடர் முடிந்துவிட்டது.இதனால் அதிக பணம் கொடுத்து வெளியில் தனியார் Scan சென்டர்கள் MRI Scan எடுக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் தனியார்களுக்கு சாதகமாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவ மனையில் MRI Scan ஐ உடனடியாக செயல்படுத்திட ஆவண செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.