» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நவ.15ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
திங்கள் 11, நவம்பர் 2024 4:34:23 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 15ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
நவம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 15.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது.
இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்;; எனவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE, DIPLOMA, I.T.I., டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Job seekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் இவ்வலுவலக தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.