» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் முப்பெரும் விழா
திங்கள் 11, நவம்பர் 2024 3:24:29 PM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வ.உ.சி. தமிழ்ப்பண்பாட்டு அருங்காட்சியகம் திறப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் முத்தமிழ் இலக்கியப் பேரவையும், கம்போடியா கெமர் தமிழ்ச் சங்கமும் இணைந்து வ.உ.சி. தமிழ்ப்பண்பாட்டு அருங்காட்சியகம் திறப்பு விழா, "பழந்தமிழர் வாழ்வியல் மரபுகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் "மண்களம்” ஆய்வுக் கோவை நூல் வெளியீடு என்ற முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வ.உ.சி.கல்விக் கழகத்தின் தலைவர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் தலைமையேற்றார், செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம் மற்றும் சொ.வீரபாகு, முதல்வர், வ.உ.சி. கல்லூரி அவர்களும் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் முதல்வர், த.கனகராஜ் வரவேற்புரையாற்றினார். தமிழ்த்துறை துணைப் பேராசிரியர் ச.பாபு நோக்கவுரையாற்றினார்.
கம்போடியா கெமர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ம.இரமேஸ்வரன் வ.உ.சி.தமிழ்ப் பண்பாட்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். திருநெல்வேலி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் வி.சிவக்குமார் சிறப்புரையாற்றினார். அவ்வுரையில் இதில் பழப்பொருட்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். வ.உ.சிதம்பரம் கல்விக் கழக உறுப்பினர்கள், எஸ்.வேணுகோபால் மற்றும் வி.காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் "மண்களம்” என்ற ஆய்வுக்கோவை நூல் கம்போடியா கெமர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ம.இரமேஸ்வரன் அவர்களால் வெளியிடப்பட்டு, தொல்லியர் ஆர்வலர் திரு முத்தலாங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார். சிவந்தி ஆதித்தனார் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இர.ராஜேஷ் நூல் மதிப்பீட்டுரை வழங்கினார், ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர், க.சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
பன்னாட்டுக் கருத்தரங்கின் முதலாம் அமர்வில் மேலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் அம்பை எல்.மணிவண்ணன் "பழந்தமிழரின் பண்பாட்டு மரபுகள்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
இரண்டாம் அமர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வி நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் ச.அமுதா "பழந்தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.மூன்றாம் அமர்வில் கேரள அரசு கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ச.குமார் "தமிழக நாட்டுப்புறக் கலை மரபுகள்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
நான்காம் அமர்வில் தமிழ்த்துறை மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். இறுதியாக வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் கல்வியியல்துறை இணைப் பேராசிரியர் சு.பிரேம லதா நன்றியுரை கூறினார். இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா இனிதே நிரைவடைந்தது. இவ்விழாவில் 97 மாணவ ஆசிரியர்களும் 15 பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.