» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் பல்கலை கால்பந்து போட்டி : தூத்தூர் புனித யூதா கல்லூரி அணி வெற்றி!
திங்கள் 11, நவம்பர் 2024 11:21:49 AM (IST)
நாசரேத்தில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் தூத்தூர் புனித யூதா கல்லூரி அணி வெற்றி பெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வைத்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற கல்லூரிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் 3 நாட்கள் நடந்தது. போட்டியை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜீவி எஸ்தர் ரெத்தினகுமாரி, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ராஜாசிங் ஹெரிஸ்டன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரி அணியும்,மரியகிரி மலங்கரா கத்தோலிக்க கல்லூரி அணியும் மோதின. இதில் தூத்தூர் கல்லூரி அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜீவி எஸ்தர் ரெத்தினகுமாரி வரவேற்றார். திருமண்டல உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளரும், கல்லூரி செயலாளருமான பிரேம்குமார் ராஜாசிங், பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குநர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் முதல் பரிசு வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் மரியகிரி மலங்கரா கத்தோலிக்க கல்லூரி அணி 2 வது இடத்தையும், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணி 3 வது இடத்தையும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி 4 வது இடத்தையும் பெற்றன.இதில் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ராஜாசிங் ஹெரிஸ்டன், நிதியாளர் சுரேஷ் ஆபிரகாம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெய்சன் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரோக்லாண்ட் நன்றி கூறினார்.