» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கன்னியாகுமரி பாலப்பணிகளை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வு!
புதன் 6, நவம்பர் 2024 5:36:44 PM (IST)
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இணைப்பு கண்ணாடி இழை கூண்டு பாலப்பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் எஸ்காந்திராஜன் தலைமையில், குழு உறுப்பினர்கள் நேற்றைய தினம் (05.11.2024) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்கள்.
அதன்தொடர்ச்சியாக இன்று (06.11.2024) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் எஸ்.காந்திராஜன் மாவட்ட ஆட்சியர் .ஆர்.அழகுமீனா, தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் சேவூர் S.இராமச்சந்திரன், S.S.பாலாஜி, ஈ.ராஜா, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, சிறை சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை, இயற்கை வளங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டதோடு, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் பாலம் அமைப்பதற்கு ரூ.37 கோடி நிர்வாக அனுமதி தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்பு நிதி பணியாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இப்பாலப்பணி மேற்கொள்ளுவதற்கான ஒப்பந்தம் M/s VME Precast Products, Chennai நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரால் வடிவமைக்கப்பட்ட கட்டுமான வடிவமைப்பு இந்திய தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ் கடல்சார் பொறியியல் பிரிவின் ஒப்புதல் எப்ரல் 2023 பெறப்பட்டது.
இப்பணிக்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி மே 2023 - ல் பெறப்பட்டது.
முதலில் திருவள்ளுவர் சிலை பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் தூண்கள் கான்கிரீட் போடும் பணி நிறைவடைந்துள்ளது. RDSO (ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு) அங்கீகரிக்கப்பட்ட M/s மெட்டல் ஸ்கோப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் பாண்டிச்சேரி நிறுவனத்தில் வளைவு உத்திரங்கள், குறுக்கு உத்திரங்கள், நீளவாக்கு உத்திரங்கள் மற்றும் குறுக்கு உத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரி கட்டமைத்தல் பணிகள் நிறைவு பெற்று, Network Arch முழுமையாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. முழுமையாக பொருத்தப்பட்ட எஃகு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு 05.08.2024 அன்று பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தற்பொழுது இரு பக்கங்களிலும் தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து வளைவு உத்திரங்கள், குறுக்கு உத்திரங்கள், நீளவாக்கு உத்திரங்கள் மற்றும் குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. உத்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த உடன் பாலத்திற்கான நடைபாதை மற்றும் ஒளிரூட்டும் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறும். தற்போது வரை 70 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.
அதனைத்தொடர்ந்து புத்தளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நான்கு முழு நேர நியாய விலைக்கடைகளும் ஒரு பகுதி நேர நியாய விலைக்கடையும் செயல்பட்டு வருகிறது. 28AP022PY எண் கொண்ட புத்தளம் 1 நியாய விலைக்கடை சங்க வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. இந்நியாய விலைக்கடையில் 685 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் குறைந்த விலையில் சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் போன்ற கட்டுப்பாட்டு பொருட்கள் இந்நியாய விலைக்கடை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கூட்டுறவு தயாரிப்புகள் குறைந்த தரமான விலையில் இந்நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கூட்டுறவு துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் புத்தளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புத்தளம், மேக்காமண்டபம், பரைக்கோடு, குருந்தன்கோடு, அருமநல்லூர், தேரூர், வீரவநல்லூர், ஆற்றூர், வெண்டலிகோடு, பாகோடு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 945 பயனாளிகளுக்கு ரூ.5.13 கோடி மதிப்பில் பயிர் காப்பீட்டு கடன்களும், அருமநல்லூர், ஆற்றூர், குருமத்தூர், வெண்டலிகோடு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 225 பயனாளிகளுக்கு ரூ.45 இலட்சம் மதிப்பில் விவசாய நகை கடன்களும், குருமத்தூர், வெண்டலிகோடு, அருமநல்லூர், தேரூர், வீரவநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு ரூ.23 இலட்சம் மதிப்பில் கால்நடை பாரமரிப்பு கடனுதவிகளும், புத்தளம், அண்டுகோடு, பெருவளம், கீழ்மிடாலம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி கடனுதவிகளும்,
பாலப்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 16 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் சுய உதவிக்குழு கடனுதவியும், இருளப்பபுரம் கிளை, குளச்சல் கிளை ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 3 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பில் சிறு குறு கடனுதவியும், இராஜாக்கமங்கலம் கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 1 பயனாளிக்கு ரூ.5 இலட்சம் மதிப்பில் வீட்டு பராமரிப்பு கடனுதவியும், குளச்சல் கிளை, இளங்கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 2 பயனாளிக்கு ரூ.22 இலட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான கடனுதவியும், குளச்சல் கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக 1 பயனாளிக்கு ரூ.30,000 மதிப்பில் ஆதரவற்றோர் விதவை கடனுதவி என மொத்தம் 1228 பயனாளிகளுக்கு ரூ.6.20 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் நாகர்கோவில் மற்றும் தக்கலை ஆகிய இரு கோட்டங்களில் ஒரு கால்நடை பன்முக மருத்துவமனை, 2 கால்நடை மருத்துவமனைகள், 49 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 15 கால்நடை கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சைப்பணி, தடுப்பூசி பணி மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் மற்றும் இராஜாக்கமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டரம் உட்பட 7 கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்று கொட்டாரம் கால்நடை மருந்தகம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு பசுவினம், எருமையினம், செம்மறியாடு, வெள்ளாடு, நாய், கோழி மற்றும் இதர கால்நடைகளுக்கு அளிக்கப்படும் செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி செலுத்தப்படும் முறை உள்ளிட்ட சிகிச்கை முறைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, நடமாடும் கால்நடை மருந்தக வாகனத்தினை ஆய்வு செய்ததோடு, அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகளின் தரம், காலவாதி தேதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து கால்நடை விவசாயிகளுக்கு தாது உப்புக்கள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிடப்பட்டதோடு, நாகர்கோவில் வடசேரியில் புதிதாக அமைக்ககப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் எஸ்.காந்திராஜன் தெரிவித்தார்.
ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிராசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, கூட்டுறவுத்துறை இணை பதிவளாளர் .சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் .சுப்புலெட்சுமி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் .ரமாதேவி, இந்து சமய அறநிலையக்குழு தலைவர் (சுசீந்திரம்) பிரபா இராமகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் ஜவஹர், .அகஸ்டினா கோகிலா வாணி, பாபு, சதாசிவன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்காந்தி, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சரவணன், துறை அலுவலர்கள், பயனாளிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.