» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்
புதன் 6, நவம்பர் 2024 8:32:23 AM (IST)
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06099) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு நாளை (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.
இந்த ரயிலில் 2 ஏ.சி மூன்றடுக்கு பெட்டிகளும், 7 சாதாரண முன்பதிவு பெட்டிகளும், 7 சாதாரண பொதுப்பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
இதேபோன்று நாளை (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06100) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
இந்த ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 2 ஏ.சி மூன்றடுக்கு பெட்டிகளும், 7 சாதாரண முன்பதிவு பெட்டிகளும், 7 சாதாரண பொதுப்பெட்டிகளும், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.