» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக சிறந்த வீட்டு நூலகத்துக்கு விருது!
வெள்ளி 11, அக்டோபர் 2024 6:36:20 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக சிறந்த வீட்டு நூலகத்துக்கு விருதினை முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வழங்கினார்.
தமிழக முதல்வர் வழிகாட்டுதலில் நிதிநிலை அறிவிப்பில் விடுகளில் சொந்த நூலகம் அமைத்து பராமரித்து வருவோருக்கு 2024 ஆண்டு முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புத்தககண்காட்சியில் மாவட்ட அளவில் தேர்வு செய்து வழங்கி கௌரவிக்க ஆணையிட்டு உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த நூலகத்திற்கான விருது 2024 பெறுவதற்கு தகுதியான நபரினை தேர்வு செய்திட நாளிதழ் செய்தி மூலம் விண்ணப்பங்களை வழங்கிட தெரிவித்திருந்தார்.
அதன்படி விண்ணப்பங்கள் தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் பெறப்பட்டு அனைத்து நூலகங்களையும் தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாசகர் ஆகியோர் கொண்ட குழுவினரால் நேரில் ஆய்வு செய்தது. இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் சொந்த நூலகம் விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டது.
இவரது நூலகம் தனது வீட்டில் தனி அறையாக கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட சிறந்த அரியவகை நூல்களுடன் அனைத்து தலைப்புகளில் பொருள் வாரிவாக பிரித்து அடுக்கி வைக்கப்பட்டு வாசகர்கள் எளிதில் தேடும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் நூல்கள் மிக அதிகமாக இடம் பெற்று உள்ளது. மேலும் குறிப்பாக தாமிரபரணி பற்றிய நூல் அதிகமாக இடம் பெற்று உள்ளன.
இந்த நூலகத்தை கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது ஆய்வுக்கு எப்போது வேண்டுமானாலும் இந்த நூலகத்தை பயன் படுத்திக்கொள்ளலாம். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட குறித்த நூல்களை அவர்களுக்கு எத்தனை பக்கம் தேவையோ, அதை குறைந்த செலவில் நகல்களும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் கட்டணம் எதுவும் இல்லாமல் நூலக ஆர்வலர்கள் நூல் ஆய்வாளர்களுக்கு பயன்பாட்டிற்கு நூல் வழங்கும் சேவையும் உள்ளது. மேலும் இந்நூலகம் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் வீட்டில் நூலகம் தனி அறையாக கீழ்தளத்தில் அனைவரின் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.
க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து தாமிரபரணி சம்பந்தப்பட்ட நூல்களின் தகவல்களை இலவசமாக எடுத்து கொள்ளும் வசதிகளும் இந்த நூலகத்தில் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது. அனைத்து வகையிலும் சிறப்பாக அமைந்து பொது மக்கள் ஆய்வாளர்கள் மாணவர்கள் வாசகர்கள் என அனைவரும் அதிகம் பயன்படுத்தி வரும் இந்நூலகத்தினை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. தூத்துக்குடி நெய்தல் புத்தக கண்காட்சியில் எட்டாவது நாள் விழாவில் சொந்த நூலகங்ஙளுக்கான விருது கேடயம் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வகித்து விருதினை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, துணை ஆட்சியர் பயிற்சி சத்யா, மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் சங்கரன், பணி நிறைவு பெற்ற மாவட்ட மைய நூலகர் பிரமநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் சரவணகுமார் தொகுத்து வழங்கினார்.