» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.64 லட்சம் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
புதன் 9, அக்டோபர் 2024 4:53:28 PM (IST)
சவலாப்பேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 85 பயனாளிகளுக்கு ரூ.64,13,279 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம், சவலாப்பேரி கிராமத்தில் இன்று (09.10.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.64,13,279 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும் போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ஒரு கடைக்கோடி கிராமத்தினை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில், வருவாய் துறையின் மூலமாக 29 பயனாளிகளுக்கு ரூ.15,29,960 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 15 பயனாளிகளுக்கு ரூ.6,43,469 மதிப்பிலான வரன்முறைப்படுத்தப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 12 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், 06 பயனாளிகளுக்கு ரூ.7,200 மதிப்பிலான சமூக பாதுகாப்புத் திட்ட உதவித் தொகைகளும், 10 பயனாளிகளுக்கு ரூ.21,85,000 மதிப்பிலான விவசாய நகைக்கடன்களையும்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக 5 பயனாளிகளுக்கு ரூ.15,500 மதிப்பிலான இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.14,250 மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 1 பயனாளிக்கு சுயதொழில் (கோழிப்பண்ணை) தொடங்குவற்கு ரூ.20 இலட்சத்திற்கான வங்கிக் கடனுதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17,900 மதிப்பிலான விலையில்லா மூன்று சக்கர சைக்கிள்கள், காதொலி கருவிகளும் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.64,13,279 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
இதுபோன்ற அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு சென்று சேர வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்த மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உங்களுக்கு எடுத்துக்கூறி இருப்பார்கள்.
எந்த மாதிரியான திட்டங்கள் எல்லாம் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்த்து அத்திட்டத்தில் பயன்பெற உரிய முறையில் விண்ணப்பிக்கும்பட்சத்தில் தங்களுடைய மனுக்களை பரிசீலனை செய்து நலத்திட்டங்களை வழங்குவதற்கு அலுவலர்கள் தயாராக உள்ளனர். இம்முகாமில், தனிநபர் சார்ந்த அல்லது பொது நலன் சார்ந்த எந்தஒரு கோரிக்கையாக இருந்தாலும் நீங்கள் மனு அளிக்கலாம். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படும்.
மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் குறைந்தளவு தண்ணீரை வைத்து அதிகப்படியான பரப்பளவு நீர்பாசனம் செய்வது குறித்து வேளாண்மைத்துறையின் மூலமாக நுண்ணீர் பாசன திட்டத்தின் செயல் விளக்கக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனுள்ள பயன்பாட்டிற்கு நுண்ணீர் பாசனக் கருவிகள் எல்லாம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்கு வேளாண்மைத்துறை தயாராக உள்ளது. எனவே, விவசாயி இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அதுபோன்று கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடைகளுக்கான தாதுஉப்பு மற்றும் அடர்தீவன ஊட்;டச்சத்து பொருட்களை எல்லாம் கண்காட்சியாக வைத்துள்ளார்கள். இதுபோன்ற தாதுஉப்பு மற்றும் அடர்தீவன ஊட்;டச்சத்து பொருட்களை கால்நடைகளுக்கு வழங்கும்போது கால்நடைகளுக்கு கருவுருதல் விகிதம் அதிகரிக்கிறது. கால்நடை வளர்ப்போர்கள் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று தவறாது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும், பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும், திட்டங்களின் பயன்கள் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் கருத்துக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது அதனை அனைவரும் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், கயத்தார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மாணிக்கராஜா, கோவில்பட்டி கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், பொது மேலாளர் ஸ்வணர்லதா, கயத்தார் வட்டாட்சியர் சுந்தர ராகவன், சவலாப்பேரி ஊராட்சி மன்றத்தலைவர் பூல்பாண்டி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.