» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு!
புதன் 9, அக்டோபர் 2024 8:17:19 AM (IST)
திருச்செந்தூர் அருகே மனைவியை தாக்கியதாக காவலர் உள்பட இரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜாக்ஸன் மனைவி ஜினோஸ்லின்(26). இவரது கணவர் ஜாக்ஸன் (28), குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜாக்ஸனுக்கு வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த ஜினோஸ்லின், கடந்த 6ஆம் தேதி மாலை ஜாக்ஸனை கண்டித்துள்ளார். அப்போது ஜாக்ஸன், அவரது தாயார் மிக்கேலம்மாள், சகோதரர் நிக்சன் ஆகியோர் ஜினோஸ்லின் மற்றும் அவரது தந்தை ஞானராஜை தாக்கினராம். இதில், காயமடைந்த அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜினோஸ்லின் திருச்செந்தூர் தாலுகா போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் காவலர் ஜாக்ஸன் போலீஸில் அளித்துள்ள புகாரில், தான், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது எனவும், அவ்வாறிருக்க கடந்த 6 ஆம் தேதி தனது குடும்பத்துடன் கோயிலுக்கு புறப்பட்ட போது, ஜினோஸ்லின், அவரது தந்தை ஞானராஜ், உறவினர் வின்ட்சன், ரூஸ்வெல்ட் மற்றும் அடையாளம் தெரிந்த 2 பேர் சேர்ந்து தன்னையும், தனது தாய் மற்றும் சகோதரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
இந்த இரு புகார்கள் தொடர்பாக, இருதரப்பையும் சேர்ந்த தி 9 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.