» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில் தங்க மோதிரம் : ஆதிச்சநல்லூரில் பரபரப்பு!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 4:25:59 PM (IST)
ஆதிச்சநல்லூரில் கல்லூரி மாணவ மாணவிகள் கள ஆய்வில் தங்கத்தால் ஆன மோதிரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகளை தொடங்கி அகழாய்வு பணிகள் நடந்தது.
இந்த அகழாய்வு பணியில் தங்கம், வெண்கலம், இரும்பால் ஆன பொருட்கள், மண்பாண்டத்தில் ஆன முதுமக்கள் தாழிகள், பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஏ, பி, சி என்ற மூன்று பிரிவுகளாக நடந்த அகழாய்வு பணியில் பி மற்றும் சி பிரிவுகளில் அதிகமாக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பி சைட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக சைட் மியூசியம் அமைக்கப்பட்டது.
இந்த சைட் மியூசியம் என்பது தொல்பொருள்களை எடுத்த இடத்தில் அப்படியே காட்சிப்படுத்துவது ஆகும். அப்படித்தான் இந்த பி சைட்டில் முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் வைத்து அதன் மேலே கண்ணாடி பேழைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் செல்பவர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும் ஆய்வாளர்களும், ஆய்வு மாணவ மாணவிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் இந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் திருநெல்வேலி புனித சேவியர் கல்லூரி தொல்லியல் துறை மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் ரமேஷ், தினேஷ் குமார் ஆகியோருடன் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட வருகை தந்தனர். அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பராமரித்து வரும் வெங்கடேஷ் மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் அகழாய்வு பணிகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதற்கிடையில் கல்லூரி மாணவ மாணவிகள் சைட் மியூசியத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு தங்க மோதிரம் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை மாணவிகள் அம்பிகா மற்றும் மேகவர்ஷினி ஆகியோர் கண்டெடுத்தனர். இதையடுத்து அந்த தங்க மோதிரம் குறித்து உடன் வந்த பேராசிரியர்களிடம் அவர்கள் காட்டினர். அவர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடேஷிடம் தெரிவித்தார். அதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் பேசிய வெங்கடேஷ் அதை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டார்.
ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே அகழாய்வு பணிகள் நடந்த போது பழமையான இரண்டு தங்கத்தால் ஆன பொருட்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த மோதிரம் தற்காலத்தில் உள்ள மோதிரமாகும். எனவே ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்க்க வந்த நபர்கள் யாரோ தவற விட்டுச் சென்றுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் ஆதிச்சநல்லூரில் தங்கம் என்றவுடனே ஆய்வாளர்களின் கவனம் முழுவதும் ஆதிச்சநல்லூரை நோக்கி திரும்பியுள்ளது. திடீரென கல்லூரி மாணவ மாணவிகள் கள ஆய்வில் தங்கத்தால் ஆன மோதிரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆதிச்சநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.