» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறப்பு : மாணவர்கள் உற்சாகம்
திங்கள் 7, அக்டோபர் 2024 12:21:09 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவ மாணவியர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது. அதன்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.