» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டுறவு நிறுவனங்களில் கூடுதல் தலைமைச் செயலர் ஆய்வு

திங்கள் 7, அக்டோபர் 2024 8:30:59 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில், கூட்டுறவு-நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செந்தூர் சரகம் ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி- விற்பனைச் சங்கத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டு, அயோடின் தூள் உப்பு விற்பனையை அதிகரிக்கவும், டான்பெட் மூலம் தேசிய கூட்டுறவு ஏற்றுமதிக் கழகத்தில் உறுப்பினராகி விற்பனையில் வளர்ச்சியடையவும் அறிவுறுத்தினார்.

முக்காணி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடனுதவிகள் என ரூ. 40.38 லட்சம் வழங்கினார். தொடர் வைப்பு நிலுவையை அதிகரிக்க மகளிர் உறுப்பினர்களிடம் ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து, தூத்துக்குடியில் மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலையால் நடத்தப்படும் மில்கோ சுயசேவைப் பிரிவு அங்காடியில் ஆய்வு செய்து விற்பனையை அதிகரிக்கவும், பிற கூட்டுறவு நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

பின்னர், மாவட்ட கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் பகுதிநேர மாணவர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துறைமுகக் கிட்டங்கியில் ஆய்வு மேற்கொண்டு சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களை 2 மாதத் தேவைக்கேற்ப இருப்பு வைக்கவும், நியாயவிலைக் கடைகளுக்கு உடனுக்குடன் நகர்வு செய்யவும் அறிவுறுத்தினார்.

ஆட்சியர் க. இளம்பகவத், மண்டல இணைப் பதிவாளர் வெ. முரளிகண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர்- செயலாட்சியர் பொ. நடுக்காட்டுராஜா, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் அ. சுப்புராஜ், இணைப் பதிவாளர் அலுவலகக் கண்காணிப்பாளர் லூ. ஜோசில்வஸ்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory