» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்
ஞாயிறு 6, அக்டோபர் 2024 10:05:56 PM (IST)
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடியில் ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் இன்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ருத்ர தர்ம சேவா நிறுவனரும், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளருமான தா.வசந்தகுமார் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சுபா.முத்து முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான வேடமணிந்த காளிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று சென்றனர்.
தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம், பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நீங்கிட வேண்டி திரிசூலம் ஏந்தி 108 பெண்கள் பங்கேற்றனர். சுவாமி மற்றும் அம்பாளின் பிரமாண்ட திருவுருவ அலங்கார ஊர்திகளும் ஊர்வலத்தில் அணிவகுத்தன. தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.