» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசை தசரா முதல்நாள் : சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதி உலா!
வெள்ளி 4, அக்டோபர் 2024 11:47:49 AM (IST)
குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் முதல் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க 10.32 மணிக்கு பட்டர் குமார் கொடிமரத்தில் கொடியேற்றினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள்'ஓம் காளி, ஜெய் காளி' என பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கொடி மரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீர், குங்குமம், இளநீர், புனித நீர் உள்பட பல்வேறு வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் காப்பு கட்டினார்கள்.
நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலையரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை தினமும் காலை 8 மணி, 10.30 மணி, பகல் 12 மணி, 1.30 மணி, 2.30 மணி, மாலை 4.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. தசரா திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.