» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குமாரபுரத்தில் நிற்காத பேருந்து மீது நடவடிக்கை : தமிழக அரசு உத்தரவு
வியாழன் 3, அக்டோபர் 2024 8:39:51 AM (IST)
திருச்செந்தூா் குமாரபுரத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்றுச் செல்ல அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட 1ஆவது வாா்டு பகுதியான குமாரபுரம், திருச்செந்தூா் - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ளது. அரசு மற்றும் தனியாா் பணியாளா்கள் மற்றும் வணிகா்கள் அதிகம் வசிக்கும் இங்குள்ள நிறுத்தத்தில் அனைத்து அரசுப்பேருந்துகளும் நின்று பொதுமக்களை ஏற்றி இறக்கிவிட்டு செல்வதற்கு ஆணை உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு வந்த அரசுப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி குமாரபுரத்தில் இறக்கிவிடுமாறு நடத்துநா் மற்றும் ஓட்டுனரிடம் கேட்டுள்ளாா். அதற்கு அங்கு நிற்காது எனக் கூறி அலைக்கழிக்கப்பட்டு மாணவி பேருந்து நிறுத்தத்தை தாண்டி இறக்கிவிடப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து குமாரபுரம் பகுதி கவுன்சிலரும், நகராட்சி துணைத் தலைவருமான ஏ.பி.ரமேஷ் தலைமையில் பொதுமக்கள், நகர திமுக செயலா் வாள் சுடலை உள்ளிட்டோா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை தொடா்பு கொண்டு பேசியதுடன், புதன்கிழமை அரசுப்போக்குவரத்து கழக கிளை மேலாளா் ராஜசேகரிடம் சம்பந்தப்பட்ட பேருந்து மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனா்.
இதையடுத்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில், குமாரபுரத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களைச் சோ்ந்த அனைத்து புகா்பேருந்துகளும் நின்று செல்வதற்கான ஆணை பிறப்பித்ததுடன், நிற்காத பேருந்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக பொதுமேலாளா் தெரிவித்துள்ளாா்.