» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை : கனிமொழி எம்பி
புதன் 2, அக்டோபர் 2024 5:21:21 PM (IST)
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
எப்போதும்வென்றான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
உத்தமர் காந்தியடிகள் 156ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று(02.10.2024) ஓட்டாபிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும்வென்றான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து, உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் முன்னிலையில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைத்திட்டம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமூக தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் மக்களைத்தேடி அவர்களின் கிராமத்திற்கே நேரில் சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து அங்கேயே தீர்வுகாணக் கூடிய அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட கண்மாய்களிலிருந்து விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் வண்டல் மண் எடுப்பதற்கு அரசாணை வெளியிட அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதன்படி, அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு மண் எடுத்து பயன்பெற்று வருகிறார்கள். விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுப்பது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை இருந்தால் மக்கள் பிரதிநிதிகளிடமோ, அரசு அலுவலர்களிடமோ தெரிவித்தால் நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள் ஆகையால், தகுதியான அனைத்து மகளிருக்கும் விரைவில் வழங்கப்படும். உங்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் இங்கு வந்துள்ளோம். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, எப்போதும்வென்றான் என்ற பெயருக்கு ஏற்றார்போல் இந்த ஊராட்சி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை, வெம்பூர், மடத்தூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக மேம்பாலம் அமைக்க வேண்டுமென்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, மேம்பாலம் அமைக்க வேண்டிய இடங்களையெல்லாம் ஆய்வு செய்துள்ளார்கள். திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறார்கள். மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட கண்மாய்களிலிருந்து தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு எந்தஒரு தடையும் கிடையாது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான அனைத்து மகளிருக்கும் நிச்சயமாக மாதம் 1000 ரூபாய் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தான் ஊராட்சிகளுக்கு நிதி அதிகளவில் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதுபோல பேரூராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டபணிகள் நடைபெறும். கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல, ஒவ்வொரு மகளிரும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு இலட்சக்கணக்கில் கடனுதவி வழங்கப்படுகிறது.
ஆகையால், மகளிர்கள் கடனுதவியை சரியாக பயன்படுத்திக்கொண்டு பொருளாதார வளர்ச்சி மேன்மை அடைய வேண்டும். குழந்தைத் திருமணம் இல்லாத கிராமங்களாக மாநிலமாக இருந்திட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவு. குழந்தை நேய மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும். 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளுமாறு சமூகநலத்துறையின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
அவர்களின் அரியாமையால் குழந்தைத் திருமணம் ஏதேனும் நடைபெற்றால் அந்த தகவலை 181 அல்லது 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைக் கற்பிப்போம் என்ற கருத்தினை மகளிர்கள் அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக முக்கியம். குழந்தை பிறந்து இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் இரண்டு வயதிற்குள் 60 சதவிகிதம் மூளை வளர்ச்சியடைகிறது. ஆரோக்கியமான, அறிவாற்றல்மிக்க குழந்தையாக இருக்க வேண்டுமென்றால் கரு உருவாகுவதிலிருந்து இரண்டு வயது வரைக்கும் கட்டாயம் தாயும் சேயும் சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். மூத்த தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பெண்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். குழந்தைகள் எடை குறைவாக இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
எந்த பிரச்சனை என்றாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சிறுவயதிலேயே கண்டறியும்பட்சத்தில் அதனை குணப்படுத்துவது மிக எளிது. இந்த ஊராட்சிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 16 வீடுகள் வந்துள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பராமரிப்பு திட்டத்தின்கீழ் 27 வீடுகளுக்கு வந்துள்ளது. இவ்வாறு வீடற்றவர்களுக்கு வீடு வழங்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் நமது தமிழ்நாடு முதலமைச்சர் . ஆகையால், மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பொதுமக்களாகிய உங்களுக்கு எப்போது உறுதுணையாக இருந்து பணியாற்றுவோம் என அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.16,50,000 கடனுதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்கள்.
முன்னதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எல்.ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், எப்போதும்வென்றான் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.