» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆணையர் தகவல்!
புதன் 2, அக்டோபர் 2024 4:05:47 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நாளை (அக்.3) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த மண்டல முகாமானது புதன்கிழமைக்கு பதிலாக வருகின்ற வியாழக்கிழமை (03.10.24) அன்று நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்படி தினத்தில் வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு வடக்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 01முதல் 14 மற்றும் 20) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.
மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு மற்றும் இறப்பு சான்று திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயரிட் அளிக்கலாம்.
மேலும் புதிய குடிநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களையும் மேற்படி முகாமில் சமர்ப்பிக்கலாம்.எனவே, பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
P. கண்ணன்Oct 4, 2024 - 06:35:33 AM | Posted IP 162.1*****