» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாநகராட்சி மத்திய அலுவலகம்: கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!
புதன் 2, அக்டோபர் 2024 3:39:44 PM (IST)
தூத்துக்குடியில் புனரமைக்கப்பட்ட மாநகராட்சி மத்திய அலுவலகத்தினை கனிமொழி எம்.பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் சுமார் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடந்தது.
விழாவில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து காந்தி ஜெயந்தியையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் 20 அடி உயரம், 30 அடி அகலம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த தேசிய கொடி 24 மணி நேரமும் பறக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்திலும் தேசிய கொடி தெரியும் வகையில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் தேவையில்லாத பொருட்களை வைக்கவும், அவைகளை தேவையுள்ளோர் எடுத்து பயன்பெறவும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்டகத்தையும் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். சாலைகளில் தேங்கும் மணல்களை அகற்றுவதற்காக அரசு வழங்கி உள்ள 2 அதிநவீன வாகனங்களை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் 64 பேருக்கு நற்சான்றிதழ்களும், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்தும் கௌரவித்தார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழாவையொட்டி நடமாடும் விழிப்புணர்வு வாகன நூலகத்தைக் கனிமொழி கருணாநிதி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தனர். புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா குறித்து பேருந்துகளில் ஒட்டப்பட்ட விளம்பரம் ஸ்டிக்கரை பார்வையிட்ட கனிமொழி, துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு அளித்தார்.
விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: நம்முடைய தேசியக் கொடியைப் போற்றக்கூடிய வகையில் இவ்வளவு பெரிய கொடி மரத்தில், தேசியக்கொடியை ஏற்றக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டம் சென்ற மழைக்காலத்தின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தங்களுடைய அடிப்படை வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கே போராடிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்திலும் மக்களுக்கான தங்கள் கடமையையும், சேவையும், பணிகளையும் செய்த நம்முடைய மாநகராட்சி ஊழியர்களுக்குப் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் சேவை மற்றும் அகிம்சை இந்த இரண்டும் தான் தொடர்ந்து மகாத்மா காந்தி அவர்கள் மக்களுக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய செய்தி. மக்களுக்காக பணியாற்ற வேண்டும், மக்களோடு வாழ வேண்டும், மக்களோடு பயணிக்க வேண்டும் அதே நேரத்தில் அகிம்சை என்பது இந்த உலகத்திற்குக் கொடையாகத் தந்திருக்கக் கூடிய மிகப் பெரிய ஆயுதம்.
அகிம்சை முறையில் போராடுவது என்பது இன்று உலகம் முழுவதும் பரவி கிடைக்கக்கூடிய, எத்தனையோ மக்களுடைய விடுதலைக்கு வித்தாக அமைந்து இருக்கக்கூடிய கூடிய ஒரு போராட்ட முறை. அதே போல், மக்கள் பணியானது மக்களோடு சென்று அவர்களுடன் ஒருவராக நின்று பணியாற்றக்கூடியது என்பது மகாத்மா காந்தி அவர்களது வழியிலே வந்தது. அந்த வழியில் தான், இங்கே இருக்கக்கூடிய ஊழியர்கள் எல்லாம், தூத்துக்குடி மழைக்காலத்தில் அடிப்படை வசதிகளை, சுற்றுப்புறச் சூழலை, சுகாதாரத்தைக் காப்பாற்றினார்கள். எந்த நோயும் பரவாமல் நம்முடைய உயிரைப் பாதுகாத்தவர்கள் என்று பாராட்டி பேசினார்.