» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது
புதன் 2, அக்டோபர் 2024 8:42:57 AM (IST)
திருச்செந்தூரில் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முன்தினம், மறுநாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு முதல் இன்று (புதன்கிழமை) முழுவதும் அமாவாசை இருக்கிறது. இதனால் நேற்று காலையில் திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதன் காரணமாக கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னர் மாலையில் கடல்நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது. எனினும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.