» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, இலங்கைக்கு தோணி போக்குவரத்து: நாளை தொடக்கம்!
புதன் 2, அக்டோபர் 2024 8:40:45 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு-இலங்கைக்கு நாளை முதல் தோணி போக்குவரத்து தொடங்குகிறது. இதற்காக சரக்கு ஏற்றும் பணி தொடங்கியது.
தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுபோல் இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.
பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷன நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை கடலில் கடினமான காலநிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவது இல்லை. செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் தோணி போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தோணி போக்குவரத்து தொடங்க உள்ளது.
இதுகுறித்து கோஸ்டல் தோணி உரிமையாளர் சங்க செயலாளர் லசிங்டன் கூறியதாவது: தூத்துக்குடியில் 25 தோணிகள் உள்ளன. இதில் 5 தோணிகள் இலங்கைக்கும், 5 தோணிகள் லட்சத்தீவு, மினிக்காய் தீவுகளுக்கும், 15 தோணிகள் மாலத்தீவுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. தோணி போக்குவரத்து கடல் பருவகால நிலையை பொருத்து சில மாதங்கள் இயக்கப்படுவது இல்லை.
வழக்கமாக செப்டம்பர் மாதம் தொடங்கக்கூடிய தோணி போக்குவரத்து, ஒரு மாதம் தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இன்று (அதாவது நேற்று) முதல் தோணிகளில் சரக்குகள் ஏற்றும் பணி தொடங்கி உள்ளது. நாளை (வியாழக்கிழமை) தோணி இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு புறப்பட்டு செல்லும்.
மேலும் மாலத்தீவில் புதிய அரசு அமைந்த பிறகு தோணி போக்குவரத்தில் சிறிய தேக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாலி துறைமுக அதிகாரிகள் தூத்துக்குடி வந்து தோணி உரிமையாளர்களை சந்தித்து பேசினர். தோணிக்கு சில சலுகைகள் அளிப்பதாக உறுதி அளித்து உள்ளனர்.
அதன்படி, தோணியை துறைமுகத்தில் நிறுத்தும் போது, இழுவை படகு மூலம் இழுத்து சென்று நிறுத்துவார்கள். இதற்கு ஒரு முறை நிறுத்துவதற்கு ரூ.40 ஆயிரம் செலவாகும். அதனை ரத்து செய்து இருக்கிறார்கள். அதேபோன்று தோணிக்கு தனியாக தளம் கேட்டு உள்ளோம். அதனையும் விரைவில் தருவார்கள் என்று நம்புகிறோம்.
இதேபோன்று இலங்கைக்கும் சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபதுறை வாய்மொழி அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் தோணி தொழில் ஆண்டு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.