» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன் டவரில் பேட்டரி திருட்டு: இருவர் கைது
புதன் 2, அக்டோபர் 2024 8:17:05 AM (IST)
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் தனியார் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரையில் கடந்த செப். 25ஆம் தேதி இரவு தனியார் செல்போன் டவரிலிருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடினர். அப்போது, சென்னையிலுள்ள செல்போன் கோபுரக் கட்டுப்பாட்டு அறையில் எச்சரிக்கை மணி (அலாரம்) ஒலித்ததாம். அதையடுத்து, அங்கிருந்து இங்குள்ள செல்போன் டவர் பராமரிப்பு ஊழியர் காளையப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், அவர் சம்பவ இடத்துக்குச் சென்றார். அவரைப் பார்த்ததும் மர்ம நபர்கள் ஆட்டோவில் தப்பிவிட்டனர். புகாரின்பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிது, சிசிடிவி பதிவைப் பார்வையிட்டு, பதிவெண் மூலம் அந்த ஆட்டோ, மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர்.
அப்போது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உடையநாதபுரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி (23), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சடையனேந்தலைச் சேர்ந்த ராம்கி (25) ஆகிய இருவரும் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்கள் சாத்தூர், மாசார்பட்டி, வேம்பார், காடல்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் செல்போன் டவர்களில் பேட்டரிகளைத் திருடியுள்ளனராம். இதையடுத்து, ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.