» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:32:34 AM (IST)
தூத்துக்குடி அருகே சோலார் நிறுவனங்களில் சுமார் ரூ.3.8 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களைத் திருடியதாக கல்லூரி மாணவர்கள் 2பேர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியில் இயங்கிவரும் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தில் சுமார் ரூ.2.3 லட்சம் மதிப்பிலான தாமிர வயர்கள் கடந்த 16ஆம் தேதி திருடு போனதாக அதன் கள அலுவலர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், புதியம்புத்தூரைச் சேர்ந்த முருகேசன் மகன் அசோக்குமார் என்ற பப்பாளி (19), கருப்பசாமி மகன் தினேஷ்குமார் (19), இடையர்காட்டைச் சேர்ந்த ஆரிபுத்திரன் மகன் தீபக்(20), புதியம்புத்தூரைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் அஜய்ராஜதுரை(20) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில், தினேஷ்குமார், அஜய் ராஜதுரை ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு, இந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலையில் ஈடுபட்டு வந்தனராம். இதையடுத்து இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து தாமிர வயர்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதேப்போன்று வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 28ஆம் தேதி சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான தாமிர வயர்கள் திருடு போனது.
இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மேல தட்டப்பாறையைச் சேர்ந்த குமாரசாமி மகன் சுடலைமணி(54), நடுவக்குறிச்சி காட்டுராஜா மகன் முத்துமணிராஜ் (24), முத்துசாமி மகன் ராமர்(23), பொன்னுசாமி மகன் விஜயகுமார்(43) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட தாமிர வயர்கள், திருட பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.