» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 3:48:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200/-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600/- வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை  வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இத்தொகை நேரடியாக மனுதாரர்களது (ஆதார் இணைக்கப்பட்ட) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து  5 ஆண்டுகளுக்கு மேல்  காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- (எழுபத்திரண்டாயிரம்) மிகாமல் இருக்க வேண்டும்.  

அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ/மாணவியருக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு....

மேலும், பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/- வீதமும் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை எந்த ஒரு அரசின் உதவித்தொகையினை பெறாதவராகவோ. எந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியாதவராகவோ. மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர் எனில் மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள், இந்த உதவித்தொகை பெறுவதற்கு, அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் நேரில் விண்ணப்பிக்கவும். மேலும், உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும், உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory